Sunday, November 15, 2009

வெண்ணிற இரவுகள்

சொல் ...?
முதலில் ஒரு கதை சொல்கிறேன்
நீ சொல்ல வந்தது ...?
பிறகு நான் சொல்லவந்ததை சொல்கிறேன்
அப்படியா ...?
ம் ...சொல்லட்டுமா ?
ம்...


அவனுக்கு டீ பிடிக்கும்
அவளுக்கு காப்பி பிடிக்கும்
இருவரும் ...காதலித்தார்கள்

ம் ...

பழைய ரஷ்யா
மெல்லிய இரவு நேரம்
சுட்டுவிடும் பனி பெய்தது
அரேபிய குதிரை நகர் நுழைவு
அதில் அழகான அவன்
எதிர்பட்ட செந்நிற அழகிகள்
சிரிப்பை சினுங்கலாக்கினர்
காதல்கண்ட தனிமை பெண்கள்
ஏக்கத்தை புன்னகையாக்கினர்
உச்சரிப்பிலாத உதடுகள் உரச
ரசனைகள் ரசங்கள் சிந்திக்கொண்டன
மாடங்களை திறக்க பறந்த புறாக்கள்
அவசரமாக முத்தமிட்டுக்கொண்டன
பிறந்தபயன் காதல்வேலை வந்ததென

அவன் அழகான அவன்
நீளமான கூந்தலையும் மார்பையும்
மறைத்துசென்ற தேவதைகளை
குறும்புடன் பின்பற்றி அடைந்தான்
செவ்விந்தியர்களின் விடுதியை
ராஜராஜ சோழன் சுற்றுலாவின்போது
இலவசமாக தந்த பல்லில்லாத புலிகளை
விடுதிவாசலில் காவலுக்கு கட்டியிருந்தனர்
புலிகள் அவன் குதிரையை ரசிக்க
அவைகளை கடந்து விடுதிக்குள் நுழைந்தான்
அவன் அழகான அவன்

பெரிய விடுதி குறைவான மனிதர்கள்
வயலின் இசை பரவிக்கிடந்தது
அவன் அந்த மேசையில் அமர்ந்தான்
அவன் பின்னே யாரோ அமர்ந்திருந்தனர்
ஒரு அழகிய பெண்ணாகவும் இருக்கலாம்
குருட்டுக்கிழவன் என்ன வேண்டுமென்றான்
அவன் டீ பிடிக்கும் என்றான்
பின்னால் யாரோ காபி என்றனர்
அவன் மேசையில் தாளமிட்டான்
குருட்டுக்கிழவன் டீ கொண்டுவந்தான்
பனியில் நனைந்த உதடுகளை சுவைப்படுத்த
ஆவலோடு பார்த்தான் ... டீ
ம் ஹும் ...டீ அங்கு இல்லை ...கோபம்
நான் டீ பிடிக்கும் என்றேன் ...என்றான்
பின்புறத்தில் தேன் தடவிய குழலின் குரல்
எனக்கு டீ வந்துள்ளது ...
நான் காபி பிடிக்கும் என்றேன் ...என்றது
குருட்டுக்கிழவன் சலனமின்றி
மாற்றிக்கொள்ளுங்கள் என்றான்
வயலின் இசை இப்போது நின்றிருந்தது

அவன் அழகான அவன்
புன்னையோடு பின்புறம் திரும்பினான்
அங்கே ...
அவள் அழகான அவள்
ரஷ்ய இலக்கணமாய் கையில் புத்தகத்துடன்
அவன் அவளுடைய காபியையும்
அவள் அவனுடைய டீயையும்
மாற்றிக்கொள்ள எத்தனித்தனர்
காப்பியும் டீயும் ஒன்றையொன்று
கடந்து செல்ல நெருங்கின
அப்போது இருவரின் கண்களும்
கவர்ச்சியிட்டுக்கொள்ள...
உந்திதலில் இருவரின் விரல்களும்
மென்மையாக பட்டுக்கொண்டன
இதில் வெட்கப்பட்டு விரல்கள் தடுமாற
காப்பியில் உள்ள காப்பி சிந்தி டீயிலும்
டீயில் உள்ள டீ சிந்தி காப்பியிலும்
நழுவி விழ ...


நின்றிருந்த வயலின் இசை
மெல்ல இசைய ஆரம்பிக்க
குருட்டுக்கிழவன் சலனமின்றி
கடந்து சென்றான்
அவள் வைத்திருந்த புத்தகம்
இனி நமக்கு வேலையில்லை என
தானாக மூடிக்கொண்டது ...அதில்
பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள்
வெண்ணிற இரவுகள் ...

என்ன அவ்வளவுதானா...?
இனி நீயே புரிந்து கொள்ளவேண்டியதுதான்
அப்படியா ...?
ம் ...நான்தான் சொன்னேனே !

அவனுக்கு டீ பிடிக்கும்
அவளுக்கு காப்பி பிடிக்கும்
இருவரும் ...காதலித்தார்கள்

என்ன அமைதி ?
ஒன்றுமில்லை ...நீ சொல்லவந்ததை சொல் ?

இனி நான் என்ன சொல்ல ...
அதோ அங்கொரு விடுதி தெரிகிறது
எனக்கு டீ பிடிக்கும் ...
உனக்கு ?........

1 comment:

  1. http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=2387

    ReplyDelete