Sunday, November 15, 2009

மழழை-ரசிகன்-உதவி இயக்குனர்-பைத்தியக்காரன்அழுகிறேன்

நான் வளராமல் சிறியவனாகி
பஞ்சாயத்து தொலைக்காட்சிமுன்
இடம்பிடித்து மணல் குவித்து
ஓட்டை டவுசருடன்
சாக்கிட்டு ஏறியிருக்கிறேன்

வயலும் வாழ்வு முடிந்து
வெள்ளிக்கு ஒளியும் ஒலியும்
சனியென்றால் இந்திப்படம்
ஞாயிறென்றால் தமிழ்ப்படம்
இன்னும் சிறிது நொடிகளில்
எண்கள் குறைய ஆரம்பிக்க

ரஜினிதான் நல்ல சண்ட
போடுவான் ரஜினி படம்
ஒன்னும் கிடையாது கமலுதான்
போடா மூக்கொழுக்கி ராமராஜன்தான்
அய்ய அவன் மாடுதான் மேய்ப்பான்
சாமி சத்தியமா விஜயகாந்துதான்
தரைமண் தலைமேல் ஊர்வலமாக

ஏய் ராசுக்கோலுகளா !
படம் சுருக்கா வரப்போது
சும்மா கெடக்கமாட்டிக
சிறுசுகள் அடங்க பெருசுகள் கத்தின
பாட்டிகளை கருத்தில் கொண்டு

அடங்காமல் களம்கொண்டன
பதினெட்டு ரீலு நிறைய்ய பெருசு
சண்டைப்பயிற்சி இருக்கா?
சண்டைப்பயிற்சி !
சண்டைப்பயிற்சி !
சண்டைப்பயிற்சி !
ஏமாத்திபுட்டாண்டா
சண்டைப்பயிற்சியே கானோம்
நான்போறேன் ஒழிஞ்சிவிளாட்டு
யார் வரீங்க ...

இதிலெல்லாம் காதின்றி
ஜெமினிகணேசன்
சாவீத்ரி
நம்பியார்
மேஜர் சுந்தர்ராஜன்
பாலய்யா
நாகேஷ்
மனோரம்மா
முனுமுனுத்துக் கொண்டிருந்தன
அன்று நிக்கோடின் படாத என் உதடுகள்
..............................
................................................நான் மழழை

பெற்றோரிருந்தும்
அனாதையில்லத்தில்
இரும்புக்கோட்டையில் மாயாவி
அம்புலிமாமா
சிறுவர்மலர்
டயானா இறப்பிற்கு அழுது
இங்கிலாந்து இளவரசிக்கு அழுகின்றவன்
அடிக்கப்படுபவனல்ல
வாத்தியார்கள் வித்தயாசம் கண்டு

தமிழிலும் சமூக அறிவியலிலும்
அதிக மதிப்பெண் பெற்று
ஆறு தன்வரலாறு கூறுதல்
சுயசிந்தனை பெற்று
அநாதையில்ல விடுதி மாணவர்க்கு
இலவச தனிவகுப்பு எடுத்த
பயிற்சி டீச்சரிடம் பிஞ்சில் பழுத்து

இரவானால் வெளிவரப்பயப்படும்
விடுதியின் பேய்களை நண்பனாக்க
இருட்டில் பலபெயர் சொல்லி அழைத்து
ராஜேஷ்குமார்
சுபா
தேவிபாலா
பழைய புத்தகக்கடையில்
கால்விலையில் வாங்க
இப்போது படிக்காத தங்கமலரை
ஓரத்தில் பார்த்து மனம்கசிய

சிவகாமியின் சபதம்
கடல்புறா
கி.ரா
மதிலுகள்
சு.ரா
சுஜாதா
புண்கண்டாலும் புத்தகத்தில் சீல்துடைத்து
புத்தக வாசனையிலேயே
காட்டுமிராண்டித்தனம் களிப்படைந்து

எண்டமூரி வீரேந்த்ரனாத்
தீராநதி உயிர்மையென
கடலும் கிழவனும் தொட்டு
கண்களெல்லாம் காமமாக
திரையரங்குகள் கூடலாக
யூதர்களுக்காக யாருமறியாமல்
60 வருடம் கழித்து அழுது
அனைவரும் முறைக்க
அவன் யாரென்று யோசித்த
........................................
...............................................................நான் ரசிகன்

ஓடிவந்தேன் சென்னைக்கு
நடைபாதைகளில்
பேருந்து நிறுத்தங்களில்
வெகு சீக்கிரமும் வெகுநேரமும்
உறங்கமுடியாமல் உறங்கியதில்
இருந்ததையும் தொலைத்து
என்னையும் தொலைக்க இருக்க
அரவணைத்த அரவாணிகள்
குரோமோசோம் கலப்பிலும்
மனிதம் காட்ட பிழைத்துவந்து

முதல் முயற்சியே
வயசுகம்மி மீசை முளைக்கல
அதுக்குள்ளவா உதவி இயக்குனர்
கல்லெடுத்து சேரன் துரத்தி
ஆட்டோகிராப் போஸ்டரில் சிறுநீர்கழித்து
மனிதம் மறைத்த மனிதர் பார்த்து
எனக்குநானே பேசிக்கொண்டு
நாட்கள் நகர்த்தி சோர்வடைந்து
உலகப்படங்களில் உயிர்ப்பெற்று

புத்திசாலியற்ற அடிமையாக
சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வெளியாக
சபதமிட்டுவந்த கோயம்புத்தூர்
வந்த நாள் முதல் செல்லாமல்
நான் வேலை செய்த முதல் படத்தில்
முதல் காட்சியில் கட்டியணைத்தது
........................................
...............................................நான் உதவி இயக்குனர்

என்னை எனக்கு எடுத்துரைக்க
சண்டையிட்டு திமிர்பிடித்தவன்
விளம்பரங்கள் மூன்றியக்கி
படமியக்க முயற்சிக்க
வேகாது உன்சட்டி
கீழ்த்தரங்கள்
முலாம் பூசென்கிறார்கள்
அறிவில்லாத முனையில்லை என்றாலும்
அதையேதான் விரும்பி கேட்கிறார்கள்
விரும்பிய சினிமாவிற்கு வாழாமல்
விரும்பாத மனிதர்களால் கழுவேற்றி
உயிரோடு வாழும்போது
வெட்கப்படு
உன்தமிழினம் சாகிறதென்று
தினமெல்லாம் மனம் நோக
புலியாகும் வாய்ப்பில்லை காடழிந்துவிட்டது
ஆதரிப்பார் யாருமன்றி என்செய்வேன்
........................................
...................................................நான் பைத்தியக்காரன்

அழுகிறேன்


No comments:

Post a Comment